இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது. சிட்னியில் நடைபெற்ற கடைசி போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 622 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. அதன்பின் விளையாடிய ஆஸ்திரேலியா 300 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஃபாலோ ஆன் முறையில் அடுத்த இன்னிங்ஸை தொடங்கியது. வானிலை சரியில்லாத காரணத்தால் நேற்று ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதனை தொடர்ந்து இந்த ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் புஜாரா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினை தட்டிச் சென்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 71 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. இதுவரை 11 முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், ஒரு தொடரை கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும். மேலும் ஆஸ்திரேலியாவில் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார். இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களையும் இந்திய வீரர்களே பெற்றுள்ளனர். புஜாரா, பந்த், கோலி ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். மேலும் இந்த தொடரில் பும்ரா பந்துவீச்சு, ரிஷப் பந்த் ரன் குவிப்பு என பலதரப்பட்ட சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.