இந்திய ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் ஷான் மார்ஷ் சிறப்பாக விளையாடி 131 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பில் முகமத் ஷமி 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதனையடுத்து 299 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆட ஆரம்பித்த இந்திய அணி தொடக்கம் முதல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா 43 ரன்களிலும், தவான் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அம்பதி ராயுடு 24 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி மற்றும் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடி சதமடித்த இந்திய அணியின் கேப்டன் கோலி 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த தினேஷ் கார்த்திக்கும், தோனியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்ஸ் அடித்து வெற்றியை உறுதி செய்ததுடன் தனது அரை சதத்தையும் கடந்து இந்திய அணியின் வெற்றிக்கும் உதவினார் தோனி. 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் 299 ரன்கள் எடுத்து இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.