பேட்டிங்கில் பெரிதும் சாதிக்காத ஹர்தீக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என்று அழைப்பது வேடிக்கையாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி விமர்சித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களை அங்கு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் களமிறக்கப்பட்ட ஹர்தீக் பாண்டியா 93 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பிறகு நடந்த ஆட்டங்களில் அவர் பெரிதாக ஏதும் ரன் சேர்க்கவில்லை. அந்தத் தொடரில் அவரது சராசரி ரன்கள் வெறும் 10 மட்டுமே. அதேபோல், ஒருநாள் மற்றும் டி20 என 8 போட்டிகளில் மொத்தமாக வெறும் 39 ரன்களும், ஆறு விக்கெட்டுகளும் மட்டுமே எடுத்திருந்தார்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி, ‘அதிர்ஷ்டவசமாக அவரை ஆல்ரவுண்டர் என எல்லோரும் அழைக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், ஐந்தாவது பந்துவீச்சாளருக்காக மட்டுமே பாண்டியா அணியில் உள்ளார். டி20 போட்டிகளின் ஆட்டத்தைப் பயன்படுத்தி டெஸ்ட் அணியில் இடம்பிடித்துவிட்டார். ஆனால், அவர் சாதிக்கவேண்டியது நிறைய உள்ளது. உடனடியாக அணிக்குள் வராமல், உள்ளூர் போட்டிகளில் கலந்துகொண்டு, சிறப்பாக ஆடி அணிக்குத் திரும்பவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.