இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக இருந்த விராட் கோலி, நடைபெறவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய இருபது ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தார்.
இதனையடுத்து ரோகித் சர்மா, நடைபெற்று வரும் உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய இருபது ஓவர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தநிலையில் இருபது ஓவர் உலகக்கோப்பைக்கு பிறகு ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மா நியமிக்கப்படலாம் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிசிசிஐ, ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளுக்கு தனி தனி கேப்டனை நியமிப்பதை விரும்பாது என்றும், அதேநேரத்தில் ஒருநாள் உலகக்கோப்பைக்கு 24 மாதங்களே இருப்பதால் ஒருநாள் அணியின் கேப்டன்ஷிப்பும் ரோகித்துக்கு வழங்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே இந்திய அணி, இருபது ஓவர் உலகக்கோப்பையை வெல்லவிட்டால், ஒருநாள் போட்டியின் கேப்டனாகவும் ரோகித் நியமிக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.