இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி - இந்தியா அபார வெற்றி
இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
196 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து சச்சின் புதிய சாதனை படைத்துள்ளார். இது இவருடைய 41வது டெஸ்ட் சதம் ஆகும்.
இங்கிலாந்துக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 14ஆம் தேதி மதியம் ஆட்டத்தைத் துவக்கிய இந்திய அணி, ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. அதிரடியாக ஆடிய சேவக் 83 ரன்களை எடுத்தார்.
9 விக்கெட்டுகள் கையில் உள்ள நிலையில், மேலும் 256 ரன்களைச் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை துவக்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. டிராவிட் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பிளின்டாப் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து கம்பீருடன் தெண்டுல்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக ஆடி அரைச்சதம் கடந்த கம்பீர், ஆன்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் எடுத்த ரன்கள் 66. அதன் பிறகு வி.வி.எஸ். லட்சுமண் ஆட வந்தார். இவர் தன் பங்குக்கு 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 224.
பின்னர் ஆடவந்த யுவராஜ், தெண்டுகருடன் இணைந்து அணியின் ஸ்கோரை மளமளவென்று உயர்த்தினார். இதனால் அணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமானது. இருவருமே அரைச்சதம் கடந்த நிலையில், வெற்றி உறுதியானது.
பொறுப்புடன் ஆடிய தெண்டுல்கர் சதமடித்தார். மறுமுனையில் யுவராஜ் சிங் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
தெண்டுல்கர் 103 ரன்களுடனும், யுவராஜ் 85 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.