
ஐசிசி யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.
19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தினை எதிர்கொண்டது. சென்வெஸ் பார்க் ஆடுகளத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 68 ரன்களுக்கு சுருண்டது.
எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 14 ஓவர்களில் இலக்கை எட்டிப் பிடித்தது. இந்திய அணியில் கோங்காடி திரிஷா மற்றும் ஹரிஷிதா பாபு 24 ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர். இத்தொடரை வென்றதன் மூலம் ஐசிசி யு19 மகளிர் உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி படைத்தது.
ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக டிடாஸ் சிதுவும் தொடரின் சிறந்த வீராங்கனையாக இங்கிலாந்து அணியைச் சேர்ந்த க்ரேஸ் ஸ்கிரீவியன்ஸும் தேர்வு செய்யப்பட்டனர்.