இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், நாளை தனது அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் மோத உள்ளது.
16 ஆண்டுகளுக்கு பிறகு உலககோப்பைகளில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோத உள்ளன. ஏற்கனவே ஒரு லீக் போட்டியில் இரு அணிகளும் விளையாட இருந்த நிலையில், மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 2003 உலக்கோப்பைக்கு பிறகு நாளைத்தான் இரு அணிகளும் உலகக்கோப்பையில் மோத உள்ளன. இரு அணிகளும் 16 ஆண்டுகளாக மோதிக்கொள்ளாவிட்டாலும் கோலியும், கேன் வில்லியம்சனும் ஏற்கனவே உலகக்கோப்பையில் மோதியுள்ளனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணியை கோலியும், நியூஸிலாந்து அணியை வில்லியம்சனும் கேப்டனாக வழிநடத்தினர். இந்த போட்டியை இந்திய அணி வென்று, அந்த ஆண்டு உலகக்கோப்பையையும் கைப்பற்றியது. இந்நிலையில் நாளை இந்த இரு அணிகளும் விளையாட உள்ள நிலையில் இன்று கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்டர் 19 உலகக்கோப்பையில் வில்லியம்சனுடன் விளையாடியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "நாளை நாங்கள் சந்திக்கும் போது அவரிடம் நான் கண்டிப்பாக இது பற்றி பேசுவேன்.11 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் எங்களது சீனியர் அணிகளுக்கு கேப்டன்களாக மாறியுள்ளது மிகவும் உற்சாகமளிக்கிறது. அப்போது அண்டர் 19 உலகக்கோப்பையில் விளையாடிய பல அணி வீரர்கள் இந்த முறை சீனியர் அணிகளில் விளையாடினர். அவர்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. நான், வில்லியம்சன் இருவருமே இப்படி ஒரு நிலைக்கு வருவோம் என அக்காலத்தில் நினைத்தே பார்த்திருக்க மாட்டோம். அனால் இன்று இப்படி இருப்பதில் மகிழ்ச்சி" என கூறினார். மேலும் நியூஸிலாந்து அணி திறமையான அணி என்பதால் நாளைய போட்டி கடினமாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.