50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியை ஐந்தே ஓவர்களில் முடித்து அசத்தியுள்ளது இந்திய அணி.
19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதிக்கொண்ட ஆட்டம் நேற்று புளூம்ஃபோண்டெய்னில் நடைபெற்றது. தனது முதல் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் ஜப்பான் அணி, நடப்பு சாம்பியனான இந்திய அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாத ஜப்பான் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 23 ஆவது ஓவரில் 41 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஜப்பான் அணி. 42 ரன்கள் என்ற எளிய இலக்குடன் விளையாட தொடங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி ஐந்தாவது ஓவரிலேயே இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்ணோய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கை பொறுத்தவரை இந்திய அணி வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் குமார் குஷாக்ரா ஆட்டமிழக்காமல் முறையே 29 மற்றும் 13 ரன்கள் எடுத்தனர்.