இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த 17 வது சீசன் ஐபிஎல் தொடர் ஆனது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. ஐபிஎல் தொடக்க விழாவானது ஏ. ஆர். ரகுமான் அவர்களின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மேலும் இந்த தொடக்க விழாவில் இந்தி பாடகர் சோனு நிகம் மற்றும் இந்தி நடிகர் அக்ஷய் குமார் டைகர் ஷெராப் உள்ளிட்டோர் ஏ. ஆர். ரகுமான் துள்ளல் இசைக்கு நடனமாடி ரசிகர்களை மகிழச் செய்தனர்.
தொடக்க விழா முடிந்த பின்பு முதல் ஆட்டம் சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் டூப்ளசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆர். சி. பி அணிக்கு கோலி மற்றும் டூப்ளசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். டூ ப்ளசிஸ் அதிரடி காட்ட, கோலி நிதானம் காட்டினார். சிறப்பாக ஆடிய டூப்ளசிஸ் 35 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த, கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ராஜட் பட்டிதார் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இவர்கள் இருவரின் விக்கெட்டையும் முஷ்டபிசுர் ரஹ்மான் அடுத்து அடுத்து எடுத்தார்.
அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்மெல்லும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்பு வந்த கேமரூன் கிரீன் மற்றும் கோலி இணை ஓரளவு பொறுமையாக ஆடியது. கோலி 21 ரன்களுக்கும், கேமரூன் க்ரீன் 18 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். இந்த ஆட்டத்தில் கோலி 6 ரன்களை எடுத்தபோது டி20 கிரிக்கெட் 12000 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் ராவத் இணை சிறப்பாக ஆடியது. அதிரடி காட்டிய இருவரும் பந்துகளை சிக்ஸர்களுக்கும் பவுண்டரிகளுக்கும் அனுப்பிய வண்ணம் இருந்தனர். மிகச் சிறப்பாக ஆடிய ராவத் , தேஷ்பாண்டே ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்க விட்டார். தினேஷ் கார்த்திக் தன் பங்குக்கு அவ்வப்போது பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசினார். ராவத் 48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய முஷ்டபிசுர் ரகுமான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.