இந்திய அணி பங்கேற்கும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இன்று இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது.
ஆட்டத்தின் முதல் நாளான இன்று டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியமால் திணறிய வங்கதேச பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியின் தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் 29 ரன்கள் அடித்தார். இதுவே அந்த அணியில் அடிக்கப்பட்ட தனிப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனையடுத்து 30.3 ஓவர்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் முறையே 2 மற்றும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடக்கி விளையாடி வருகிறது.