நடப்பு ஐபிஎல் சீசனின் 41 ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. 19.5 ஓவரில் 198 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்ததன் மூலமாக 201 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.
சென்னை அணியில் அதிகபட்சமாக கான்வே 92 ரன்களும் ருதுராஜ் கெய்க்வாட் 37 ரன்களும் ஷிவம் துபே 28 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங், சாம் கரண், ராகுல் சாஹர், சிக்கந்தர் ரஸா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பஞ்சாப் அணி பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங் 42 ரன்களும் லிவிங்ஸ்டன் 40 ரன்களும் சாம் கரண் 20 ரன்களும் ஷிகர் தவான் 28 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே மூன்று விக்கெட்களும் ஜடேஜா இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் கான்வே 92 ரன்களை எடுத்திருந்தார். இவர் 45 ரன்களை கடக்கும் போது ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் 3 ஆவது இடத்தில் இணைந்துள்ளார். இவர் 144 இன்னிங்ஸ்களில் இச்சாதனையை படைத்துள்ளார். முதல் இடத்தில் கிறிஸ் கெயில் 132 இன்னிங்ஸ்களிலும் இரண்டாவது இடத்தில் கே.எல்.ராகுல் 143 இன்னிங்ஸ்களிலும் இச்சாதனையை படைத்துள்ளனர். மேலும் பேட்டர் 5000 ரன்களை கடக்கும் போது அவர் வைத்திருக்கும் சராசரி ரன்னில் கான்வே முதலிடத்தில் உள்ளார். இவர் 44.41 சராசரியில் 5000 ரன்களை கடந்துள்ளார். இரண்டாவது இடத்தில் பாபர் அசாம் உள்ளார். இவர் 44.02 சராசரியுடன் 5000 ரன்களை கடந்துள்ளார்.
இந்த போட்டியில் தோனியின் இறுதி 2 இரண்டு சிக்ஸர்களுடன் சென்னை அணி 200 ரன்களை குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை 200 ரன்களை எடுத்த அணிகளின் பட்டியலில் சென்னை அணி முதல் இடத்தில் உள்ளது. இது வரை சென்னை அணி 27 முறை 200 ரன்கள் அல்லது அதற்கும் மேல் குவித்துள்ளது. இரண்டாவது இடத்தில் பெங்களூர் அணி 24 முறை 200 ரன்கள் அல்லது அதற்கும் மேல் குவித்துள்ளது.