தென் ஆப்பிரிக்க அணியுடனான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெடுகள் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்தது. இதில் கேப்டன் கோலி அதிகபட்சமாக 160 ரன்கள் எடுத்திருந்தார். இந்தப் போட்டியில் சதம் அடித்த பல்வேறு சாதனைகளையும் முறியடித்துள்ளார்.
* 159 பந்துகளைச் சந்தித்த விராட் கோலி 160 ரன்கள் அடித்திருந்தார். இதில் பவுண்டரிகள் இல்லாமல் ஓடியே அவர் சேர்த்த ரன்கள் மட்டும் நூறு (75 ஒரு ரன்கள், 11 இரண்டு ரன்கள் மற்றும் ஒரு 3 ரன்கள்). மேலும், 12 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் இதில் அடக்கம்
* ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக 150 பந்துகளைச் சந்தித்து சாதனை படைத்திருக்கிறார் கோலி
* ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த எட்டாவது வீரர் கோலி
* இந்திய கேப்டனாக பொறுப்பேற்று தனது 46ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய விராட், 12 சதங்களைக் கடந்துள்ளார். இதன்மூலம் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார். கங்குலி 147 போட்டிகளில் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் இந்த சாதனையில் 22 சதங்களுடன் முதலிடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.
* நேற்றைய போட்டியில் விராட் கோலி தனது 34ஆவது சதத்தைக் கடந்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நமீபியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் 152 (151) ரன்கள் எடுத்திருந்தார். இது அவருக்கு 34ஆவது சதம் ஆகும். அதே 34ஆவது சதத்தை நிறைவு செய்ததுடன், சச்சினின் சாதனையையும் 101 இன்னிங்க்ஸுகளுக்கு முன்பாகவே கோலி முறியடித்துள்ளார்.