கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்வாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 11ஆவது சீசன் வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரின் ஏலம் முடிந்து அந்தந்த அணிகளுக்கான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டன் பொறுப்பு குறித்த பிரத்யேக அறிவிப்பை அந்தந்த அணிகளின் சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று காலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் பொறுப்பேற்பார் என அந்த அணியின் செயல் அதிகாரி வெங்கி மைசூர் தெரிவித்தார். மேலும், அந்த அணியின் துணைக் கேப்டனாக ராபின் உத்தப்பா செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொல்கத்தா அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின் செயல்படுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அந்த தகவல் உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்போது தினேஷ் கார்த்திக்தான் கேப்டன் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக இன்னொரு தமிழர் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.