Skip to main content

டுபிளஸ்ஸிஸைப் பார்க்கும் போது கஷ்டமாக இருந்தது - இம்ரான் தாஹிர் உருக்கம்!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

du Plessis

 

வீரர்களுக்கு டுபிளஸ்ஸிஸ் கூல்டிரிங்ஸ் எடுத்துக்கொண்டு சென்றதைப் பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருந்தது என சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் உருக்கமாகப் பேசியுள்ளார்.

 

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13 -ஆவது ஐ.பி.எல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி தொடர் தோல்விகளால் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 3 வெற்றிகள், 7 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கடந்த ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா நிறத்தொப்பியைக் கைப்பற்றிய இம்ரான் தாஹிருக்கு, நடப்பு ஐ.பி.எல் தொடரில் களமிறங்க வாய்ப்பு வழங்காதது உட்பட பல காரணங்கள் சென்னை அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. 

 

இந்நிலையில், இது குறித்து இம்ரான் தாஹிர் பேசுகையில், "சென்னை சூப்பர் கிங்ஸ் சிறந்த அணி. உலகெங்கும் பல அணிகளுக்காக கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். ஆனால், சென்னை அணி நிர்வாகம் அளித்த மரியாதையைப் போல வேறெந்த அணி நிர்வாகமும் அளித்தது இல்லை. சென்னை ரசிகர்கள் நம்பமுடியாத அளவுக்கு அணி மீது அன்பு காட்டுகிறார்கள். நான் இங்கே முழுவதும் வித்தியாசமான சூழலில் விளையாடுகிறேன். நான் இந்த சீசனில் விளையாடும் அணியில் இடம்பிடிப்பேனா என்பது குறித்து எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான டுபிளஸ்ஸிஸ் சென்னை அணியில், ஒரு சீசன் முழுவதும் வீரர்களுக்கு 'கூல்டிரிங்ஸ்' கொண்டு சென்றார். அதைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது" எனக் கூறினார்.