இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் நேற்று முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் புஜாரா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினை தட்டிச் சென்றார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 71 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. இதுவரை 11 முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், ஒரு தொடரை கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும். மேலும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார். இதற்காக பல்வேறு தரப்பிலிருந்தும் இந்திய அணிக்கும், கேப்டன் கோலிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் இந்திய அணிக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், ''விராட் கோலிக்கும், இந்திய அணிக்கும் எனது வாழ்த்துகள். துணைக் கண்டத்திலிருந்து ஒரு கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்றுள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.