உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி வென்று கோப்பையை கைப்பற்றியது.
இங்கிலாந்து நாட்டில் சவுதாம்ப்டனில் நடந்த இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. பரபரப்பான இறுதி நாள் ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயித்த 139 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி கடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்களும் எடுத்தது. அதேபோல் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 249 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 140 ரன்களும் எடுத்தது.
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு சுமார் ரூபாய் 12 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூபாய் 6 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
ஐ.சி.சி. நடத்திய டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்றன. முதல்முறையாக ஐ.சி.சி. நடத்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் அணியாக நியூசிலாந்து கோப்பையை வென்றது.
'அதே ரிசர்வ் டே, அதே நியூசிலாந்து, அதே தோல்வி'!
மழை பாதிப்பால் டெஸ்ட் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி ஆறாம் நாளான ரிசர்வ் டே அன்று நடத்தப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட ஐந்து நாளில் போட்டி முடிந்திருந்தால் இறுதிப் போட்டி டிராவை நோக்கி சென்றிருக்கும். முதல்முறையாக ஆறாம் நாளில் போட்டி நடத்தப்பட்டதால் இந்தியா தோல்வியைத் தழுவி கோப்பையை நழுவவிட்டது. கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ரிசர்வ் டே அன்று நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. அதேபோல், இங்கிலாந்தில் 2019- ஆம் ஆண்டு ஜூலையில் நடந்த அரையிறுதி போட்டி மழை காரணமாக ரிசர்வ் டே நோக்கி சென்றது. மறுநாள் நடத்தப்பட்ட போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. மழை, ரிசர்வ் டே, நியூசிலாந்து அணி, மைதானம் என ஐ.சி.சி. தொடரில் இந்திய அணியை தோல்வி துரத்துகிறது.