வெறும் 28 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்து மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி.
மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ’ஏ’-வில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று பலப்பரீட்சை மேற்கொண்டன. செயிண்ட் லூகாஸில் உள்ள மைதானத்தில் மோதிய அணிகள் இரண்டுமே பலமானவை என்பதால் போட்டியின் தொடக்கத்திலேயே எதிர்பார்ப்பு வலுத்தது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது.
|
முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 107 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. எளிமையான இலக்கை நோக்கி சேஷிங்கில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 48 ரன்கள் வரை ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்தது. ஆனால், அடுத்தடுத்து மளமளவென விக்கெட்டுகளைப் பறிகொடுக்கத் தொடங்கியது. 76 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், வெறும் 28 ரன்களுக்குள் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டம் ஸ்டெஃபினி டெய்லர் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 2016ஆம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்வதற்குக் காரணமாக இருந்தவர் இந்த டெய்லர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.