நடுவர்கள் வழங்கிய தவறான தீர்ப்பு குறித்து பேச விரும்பவில்லை என தோனி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின், சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் எதிர்பாராத விதமாக
தோனி கேப்டனாக பொறுப்பேற்றது மிகப்பெரிய உற்சாகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 252 எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், போட்டி எந்த முடிவும் எட்டாமல் ட்ராவில் முடிந்தது. இதற்கிடையில், முக்கியமான கட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த சமயத்தில், தோனி மற்றும் தினேஷ் கார்த்திக்கிற்கு தவறான எல்.பி.டபில்யூ. தீர்ப்புகளை வழங்கினர் நடுவர்கள். இது, விக்கெட்டுக்குப் பிந்தைய திரையிடலிலும் உறுதியானது.
இந்நிலையில், போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தோனி, ஆப்கானிஸ்தான் அணி மிகவும் நேர்த்தியான முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக பாராட்டினார். மேலும், “எங்கள் அணியில் தேவையற்ற ரன்-அவுட்டுகளைக் கொடுத்தோம். அதேபோல், சில பேசமுடியாத விஷயங்களும் நடந்தன. அதைப் பேசி நான் அபராதம் செலுத்த விரும்பவில்லை” என பாதுகாப்பாக பேசினார்.
ஐ.சி.சி. நடத்தை விதிகளின்படி, போட்டி முடிந்தபின்னர் பொதுவெளியில் நடுவர்களை விமர்சிக்கக் கூடாது என்பதால் தோனி இவ்வாறு பேசியுள்ளார்.