காமன்வெல்த் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டு நகரில் 21ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இந்தியாவின் 28 வயதான ஹீனா சித்து 25 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் களமிறங்கினார். அதில் 38 புள்ளிகளுடன் காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டிகளின் முந்தைய சாதனையை அவர் முறியடித்தார். மேலும், இந்த ஆண்டில் அவருக்கு இது இரண்டாவது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் எலினா கலியாபோவிட்ச் 35 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார். மலேசியாவின் அலியா சஜானா அசாஹரி 26 புள்ளிகள் எடுத்து மூன்றாம் இடம்பிடித்தார்.
முன்னதாக தகுதிச்சுற்றில் 579 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருந்த ஹீனா சித்து, தங்கம் வென்று அசத்தினார். அதேசமயம், தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் அன்னு சிங், ஆறாவது இடத்தைப் பிடித்து தோல்வியடைந்தார்.
தற்போதைய நிலையில், இந்தியா பதக்கப்பட்டியலில் 11 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 20 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.