டி 20 உலகக்கோப்பை தொடரில் ஐக்கிய அமீரக அணிக்காக ஆடிவரும் சென்னையை சேர்ந்த கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமீரக அணி ஆசியக் கோப்பை வெற்றியாளர் இலங்கையை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற அமீரகம் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய இலங்கை அணி துவக்கம் முதலே அடித்து ஆடி ரன்களைச் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 42 ரன்களாக இருந்த போது குசல் மெண்டீஸ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய நிசன்கா கடைசி வரை ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
20 ஓவர்களில் இலங்கை அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. இதில் 15 ஆவது ஓவரை வீச வந்த கார்த்திக் மெய்யப்பன், ராஜபக்ஸா, அசலங்கா, இலங்கை கேப்டன் சனங்கா ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையை பதிவு செய்தார். இதன் மூலம் நடப்பு டி20 உலகக் கோப்பையில் முதல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை கார்த்திக் மெய்யப்பன் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி ஐக்கிய அமீரக அணிக்காக டி 20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் நபர் என்ற பெருமையையும் கார்த்திக் மெய்யப்பன் பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து 153 ரன்கள் இலக்குடன் ஆட வந்த ஐக்கிய அமீரக பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் அமீரக அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 73 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை அணியில் சிறப்பாக பந்து வீசிய ஹசரங்கா 4 ஓவர்களில் ஒரு மெய்டன் ஓவர் வீசி 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.