ஐபிஎல் - 2024 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி அண்மையில் வாங்கியிருந்த நிலையில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்தவர் ஹர்திக் பாண்டியா.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பை பெற்றுக் கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து விடுவித்து ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுவரை 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பை பெற்றுக் கொடுத்த ரோகித் சர்மாவுக்கு மும்பை அணி நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது. அதில், “ரோகித் ஷர்மாவின் ஒப்பற்ற தலைமைக்கு நன்றி. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மும்பை அணியின் கேப்டனாக அவரது பங்களிப்பு சாதாரணமானது அல்ல. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியை குவித்தது மட்டுமல்லாமல், ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டனாக இடம்பிடித்துள்ளார். அணியை மேலும் வலுப்படுத்த களத்திலும், வெளியிலும் அவரின் வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
அதே சமயம் கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக அறிவித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியைத் தனக்கு கொடுத்தால்தான் குஜராத் அணியை விட்டு வருவேன் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடம் ஹர்திக் பாண்ட்யா நிபந்தனை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஹர்திக் பாண்ட்யாவின் நிபந்தனையை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஏற்று, அவரைக் கேப்டனாக நியமிக்கப் போவதாக உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு ரோஹித் சர்மாவிடம் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.