இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக செயல்பட்டு வரும் ஹர்தீக் பாண்டியா, இன்னமும் அந்தப் பொறுப்பை முழுமையாக நிறைவேற்றத் தொடங்கவில்லை என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு விளையாடி வரும் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் பெரிதும் சோபிக்காத நிலையில், பலரும் விமர்சன எல்லைக்குள் சிக்கியுள்ளனர். அதில் ஆல்ரவுண்டர் என்ற பொறுப்பைப் பூர்த்தி செய்ய பாண்டியா இன்னும் பழக வேண்டியுள்ளது என மைக்கேல் ஹோல்டிங் கூறியுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அவர், ‘களத்திற்கு ஆல்ரவுண்டர் என்ற லேபிளுடன் அனுப்பிய பிறகு இரண்டு மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும். அதேபோல், பேட்டிங்கிலும் 60, 70 ரன்கள்; சில சமயங்களில் சதம் என விளாசவேண்டும். அப்படிச் செய்தால் பாராட்டு நிச்சயம். கேப்டன் கடினமான சூழலில் விக்கெட்டைக் கைப்பற்றுவார் என்ற நம்பிக்கையில் பந்தைத் தரவேண்டும். அப்போதுதான் ஆல்ரவுண்டர் என்ற பொறுப்பை அவர் காப்பாற்றுகிறார் என்று அர்த்தம். அவர்தான் அடுத்த கபில்தேவ் என்றெல்லாம் கூட சொல்வதைக் கேள்விப்பட்டேன். உண்மையில் அவர் அந்தப் பெருமையை அடையத் தகுதியுள்ளவரா என்பதை, அவர்தன் விளையாட்டின் மூலம் நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.