ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டிலிருந்து 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதனையொட்டி வீரர்களை வாங்குவதற்கான விரைவில் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் மெகா ஏலத்திற்கான புதிய விதிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளன.
அந்த தகவலின்படி, ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று வரும் 8 அணிகளும் நான்கு வீரர்களைத் தக்க வைத்துக்கொள்ளலாம். அந்த நான்கு வீரர்களில் மூன்று பேர் இந்தியர்களாகவும் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் அல்லது இரண்டு பேர் இந்தியர்களாகவும் இருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஆர்.டி.எம் கார்டு இந்த ஏலத்தில் பயன்படுத்தப்படாது. அதேபோல் வீரர்களை ஏலம் எடுப்பதற்கான மொத்த தொகை ஒவ்வொரு அணிக்கும் 85-லிருந்து 90 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் புதிதாக வரும் அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள், ஏலத்திற்கு வரும் வீரர்களில் மூன்று பேரை ஏலம் தொடங்குவதற்கு முன்பே வாங்கிக் கொள்ளலாம் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே ஏலத்திற்கு வரும் வீரர்களில் மூன்று பேரை புதிய அணிகள் முன்கூட்டியே வாங்கலாம் என்பதற்கு, ஏற்கனவே ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் அணிகளின் உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.