இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டி கடந்த ஞாயிறு அன்று (24.10.2021) நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது. இதனால் அடுத்து நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து, அணித் தேர்வு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, ஃபார்மில் இல்லாத ஹர்திக் பாண்டியா பந்து வீசாத நிலையில், அணியில் தொடர்வது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இதனையடுத்து, நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில், ஹர்திக் பாண்டியாவை நீக்கிவிட்டு ஷர்துல் தாகூரை அணியில் சேர்க்க கேப்டன் விராட் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில், ஹர்திக் பாண்டியா நேற்று (27.10.2021) பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். சுமார் 20 நிமிடங்கள் அவர் நெட்ஸில் (nets) பந்து வீசிய நிலையில், அதனைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ஆலோசகர் தோனியும் கண்காணித்துள்ளனர். ஒருவேளை ஹர்திக் பாண்டியா நெட்ஸில் நன்றாகப் பந்து வீசும் பட்சத்தில், அவர் இந்திய அணியில் தொடர்வார் என்றும், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பந்து வீச வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடைசியாக இலங்கை சுற்றுப்பயணத்தின்போது பந்து வீசிய ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் போட்டிகளின்போது பந்து வீசாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.