உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்களை குவிக்க இந்திய அணியோ முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்களை இழந்து 270 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்து இந்திய அணிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்திய அணி கடைசி இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்த விமர்சன பதிவு ஒன்றுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில், “தோனி மட்டும் தனியாக விளையாடி இந்தியாவுக்கு கோப்பைகளை வென்று கொடுத்தாரா. அணியில் இருந்த மற்ற 10 வீரர்கள் விளையாடவில்லையா. ஆஸ்திரேலியா போன்ற மற்ற நாடுகள் உலகக் கோப்பையை வெல்லும் போது அந்த அணியினர் வெற்றி பெற்றதாக கூறுகின்றனர். ஆனால் இந்திய அணி வெற்றி பெற்றால் கேப்டன் வென்றார் என்று கூறப்படுகிறது. ஒன்றாக சேர்ந்து வெற்றி பெறுவோம்; ஒன்றாக சேர்ந்து தோல்வி அடைவோம்" எனத் தெரிவித்துள்ளார்.