தென்னாப்பிரிக்க மூத்த வீரர் ஜாக்ஸ் காலிஸ்க்கு உயரிய விருதான 'ஹால் ஆஃப் பேஃம்' விருதினை வழங்கி ஐசிசி கௌரவித்துள்ளது.
ஹால் ஆஃப் பேஃம் விருதானது ஐசிசி சார்பில் வழங்கப்படும் மிக உயரிய விருது. இவ்விருதானது சர்வதேச கிரிக்கெட்டில் மகத்தான சாதனை படைத்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு இவ்விருதிற்கு தென்னாப்பிரிக்க வீரர் ஜாக்ஸ் காலிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1995ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஜாக்ஸ் காலிஸ் 2013ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஓய்வு பெற்றார். மொத்தம் 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,289 ரன்கள் எடுத்துள்ளார். அதே போல 328 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள காலிஸ் மொத்தம் 11,579 ரன்கள் எடுத்துள்ளார்.
சிறந்த ஆல்ரவுண்டரான காலீஸ் ஒருநாள் போட்டிகளில் 273 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 292 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் 23 முறை டெஸ்ட் போட்டிகளில் ஆட்டநாயகன் விருதினை வென்றுள்ளார். இதுவரை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றிலேயே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் ஜாக்ஸ் காலிஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.