ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கே கூடுதல் வாய்ப்புள்ளது என ஆஸி., அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் தொடரையடுத்து, இருபது ஓவர் போட்டித் தொடரும், அதனையடுத்து டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளன.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதனால், எதிர்வரவிருக்கும் தொடர் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான கிளென் மெக்ராத் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் குறித்துப் பேசுகையில், "உமேஷ் யாதவிடம் நல்ல வேகம் உள்ளது. ஷமி இரு வகையிலும் பந்தைச் சிறப்பாக சுழலச் செய்கிறார். மேலும், தரமான வீரர் பும்ரா உள்ளார். இரண்டாம் அல்லது மூன்றாம் கட்டமாக பந்துவீசும் போதும், முதற்கட்டத்தில் இருந்த அதே வேகம் அவரிடம் உள்ளது. சரியான ஃபார்மில் இருந்தால் வீழ்த்த முடியாத பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதேநேரத்தில் எதிரணியில் சிறப்பாகப் பந்துவீசக்கூடிய வலிமையான வீரர் ஹேசில்வுட் உள்ளார். நாள் முழுவதும் 100 சதவிகிதப் பங்களிப்பை அளிக்கக்கூடிய பேட் கம்மின்ஸ் உள்ளார். இடக்கை பந்துவீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் உள்ளார். களம் அவருக்குச் சாதகமாக அமைந்துவிட்டால், நான்கு முதல் ஐந்து விக்கெட்டுகளை தனியாளாக வீழ்த்திவிடுவார். அவரிடம் அதற்கான சிறப்புத் திறமை உள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் இருந்தாலும், வெற்றி வாய்ப்பில் ஆஸ்திரேலியாவே சற்று முன்னிருக்கிறது. காரணம்,ஸ்டார்க் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்" எனக் கூறினார்.