Skip to main content

அதிரடியான வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா! செய்த அசத்தலான சாதனைகள் என்ன?

Published on 02/11/2023 | Edited on 03/11/2023

 

India in the semi-finals with a dramatic victory! What are the amazing achievements?

 

உலகக்கோப்பையின் 33 ஆவது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது.

 

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித்தின் சொந்த ஊர் என்பதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் அவர் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். அடுத்து வந்த கோலி, கில்லுடன் இணைந்து பொறுப்பாக ஆடினார்.  சதமடிப்பார் கில் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் 92 பந்துகளில் மதுஷங்கா பாலில் அவுட் ஆனார். அடுத்து கோலியாவது சதமடிப்பாரா என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அவரையும் மதுஷங்கா 88 ரன்களில் அவுட் ஆக்கினார். அடுத்தடுத்து இருவரும் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து இணைந்த ராகுல், ஷ்ரேயாஸ் இணையில் ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சூர்யா மிரட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 12 ரன்களுக்கு வீழ்ந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஷ்ரேயாஸ் தனது அதிரடியை காட்டத் தொடங்கினார். 6 சிக்ஸர்கள் அடித்து சதத்தை நெருங்கும் நேரத்தில் மதுஷங்கா பந்தில் 82 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் ஜடேஜாவின் கடைசிக் கட்ட அதிரடியான  35  ரன்கள் உதவியுடன் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட்டுகள் இழப்பிற்கு  357 ரன்கள் குவித்தது.

 

358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணிக்கு ஆட்டத்தின் முதல் பந்திலே அதிர்ச்சி கொடுத்தார் பும்ரா. இலங்கை அணியின் நிஷங்கா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கருணரத்னே 0, கேப்டன் குசால் மெண்டிஸ் 1, சமரவிக்ரமா 0 என நடையைக் கட்டினர். 3-4  தடுமாற அடுத்து வந்த அசலங்கா 1, ஹேமந்தா 0 என இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து  ஷமி க்கு மீண்டும் ஒரு ஹாட்ரிக் வாய்ப்பை வழங்கினர். ஆனால் அடுத்த பந்தை சமீரா சரியாக எதிர் கொண்டு ஹாட்ரிக் வாய்ப்பை தடுத்தார். இருந்தும் அவரும் சில பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். 22-7 எனும் மோசமான நிலையை எட்டியது. அடுத்து மேத்யூஸ் 12 எனும் இரட்டை இலக்க எண்ணை எட்டி ஷமி பந்து வீச்சில் போல்டு ஆனார். 29-8 என இருந்த நிலையில்,  ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 35 ரன்கள் எனும் ஜிம்பாப்வே அணியின் மோசமான சாதனையை பின்னுக்கு தள்ளி விடுமோ என இலங்கை ரசிகர்கள் அஞ்சிய நிலையில், ரஜிதாவின் 14 ரன்களும், தீக்ஸனாவின் 12 ரன்களும் கை கொடுக்க மோசமான வரலாற்றில் இருந்து தப்பியது. இருப்பினும் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இது இந்திய அணியின் நான்காவது மிகப்பெரிய வெற்றியாகும். முதலிடத்திலும் இந்திய அணியே உள்ளது. கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 309 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. அதுவே ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன் வித்தியாசம் ஆகும். இந்திய அணி சார்பில் ஷமி 5 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

 

ஆட்டநாயகனாக மிக சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷமி தேர்வு செய்யப்பட்டார்.

 

இன்றைய போட்டியில் ஷமி ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், உலக கோப்பையில்  3  முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்கிற சாதனையை, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் உடன் சமன் செய்துள்ளார்.

 

அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக இந்தியா சார்பில் உலகக்கோப்பைகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்கிற ஜாகீர் கான் (44) சாதனையை பின்னுக்கு தள்ளி 45 விக்கெட்டுகளுடன் உலகக் கோப்பைகளில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.

 

மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 4 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், அதிக முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்னும் ஸ்ரீநாத்தின் (3) சாதனையையும் முறியடித்துள்ளார்.

 

இன்றைய ஆட்டத்தில் 357 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக  முறை (36) 350-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த அணி என்கிற சாதனையை இந்தியா தொடர்ந்து தக்க வைத்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தென் ஆப்ரிக்க அணி 33 முறை 350 க்கும் மேற்பட்ட ரன்களை  குவித்துள்ளது.

 

இதற்கு முன்பு 2011 உலகக் கோப்பையில் இதே வான்கடே மைதானத்தில் இந்திய அணி இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டு 23 வருடங்களுக்குப் பின் உலகக் கோப்பை வென்று வரலாற்று சாதனை புரிந்தது. அதேபோல 12 வருடங்களுக்குப் பின்பு உலக கோப்பையில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளதால், வான்கடே மைதானம் இந்தியாவுக்கு ராசியான மைதானம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

- வெ.அருண்குமார்