கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் ஆட்டமிழந்து சென்ற 2 நிமிடங்களுக்குள் அடுத்த வீரர் களத்திற்குள் இறங்கி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது விதி. அதற்கு மேல் தாமதமானால் எதிரணி கேப்டன் அப்பீல் செய்து அந்தப் புதிய வீரரை பேட்டிங் செய்யாமலேயே ஆட்டமிழக்கச் செய்யலாம்.
உலகக் கோப்பை 2023ன் 38 ஆவது லீக் ஆட்டம் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நேற்று (06.11.2023) நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. அதன்படி இலங்கை அணி பேட்டிங்கில் களம் இறங்கியது.
இந்தநிலையில், அணியின் ஸ்கோர் 135 - 4 என்று இருந்தபோது, அந்த அணியின் அனுபவ வீரர் மேத்யூஸ் களம் இறங்கினார். ஆனால் சரியான ஹெல்மெட் எடுத்து வராததால், வேறு ஹெல்மெட்டை எடுத்து வரச் சொல்லி பெவிலியனை நோக்கி கையசைத்தார். இதில் 3 நிமிடங்கள் ஆகிவிட்டது. இதனால் எதிரணி கேப்டன் ஷகிப் அவுட் என அப்பீல் கோரினார். ஆலோசித்த அம்பயர்கள் அவுட் என அறிவித்தனர். இதனால் ஏமாற்றமடைந்த மேத்யூஸ் விளையாடாமலேயே அவுட்டாகி வெளியேறினார். உலக கிரிக்கெட்டில் இந்த விதி இருந்தாலும் இதுவரை பயன்படுத்தப்பட்டது கிடையாது. எனவே மேத்யூஸ் இந்த முறையில் அவுட் ஆன முதல் வீரரானார்.
இது பெரும் விவாதம் ஆகியுள்ள நிலையில், 2007ம் ஆண்டு கேப்டவுன் மைதானத்தில் நடந்த இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கான டெஸ்ட் போட்டியின் போது, சவுரவ் கங்குலி 6 நிமிடங்கள் கழித்தே பேட் செய்ய மைதானத்திற்கு வந்தார். ஆனால், அவருக்கு அவுட் கொடுக்காமல் அவர் பேட் செய்ய அனுமதிக்கப்பட்டார். இது தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் துவக்க வீரரான வாஸிம் ஜாஃபர், 2.2 ஓவரில் தனது விகெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அன்று ஆட வரவேண்டியவர் சச்சின் டெண்டுல்கர். ஆனால், இந்தப் போட்டியின் மூன்றாவது நாளில் சச்சின் அனுமதித்த நேரத்தைக் கடந்து மைதானத்தில் இருந்ததால், அவர் அடுத்த நாள் 10.48 மணிக்கே மைதானத்திற்குள் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி வாஸிம் ஜாஃபர் 10.43க்கு தனது விக்கெட்டை இழக்க சச்சின் மைதானத்திற்குள் வர முடியாத அந்த சூழலில் ஆட வேண்டியது வி.வி.எஸ். லட்சுமணன். ஆனால், அவர் அப்போது குளித்துக்கொண்டிருந்ததால் அவராலும் மைதானத்திற்கு வர முடியாமல் போனது. அதனைத் தொடர்ந்து சவுரவ் கங்குலி அவசர அவசரமாக தனது உடையை மாற்றிக்கொண்டு மைதானத்திற்கு வந்தார். ஆனால், அவர் மைதானத்திற்கு வர ஆறு நிமிடங்கள் ஆனது. இதனால், அப்போது அவருக்கு டைம் அவுட் முறைப்படி அவுட் கொடுக்கப்படலாம் என வர்ணனையாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது ஆட்ட நடுவரான ஹார்பெர், தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனான கிரேம் ஸ்மித்திடம் நிலைமையை விளக்கினார். அதனை ஏற்ற கிரேம் ஸ்மித் கங்குலியை டைம் அவுட் முறையில் அவுட் செய்ய அப்பீல் கேட்காமல் அவரைக் களம் காண சம்மதம் தெரிவித்தார். அதன் காரணமாக அன்று ஆறு நிமிடங்கள் தாமதமாக மைதானத்திற்கு வந்தும் டைம் அவுட் ஆகாமல் கங்குலி பேட் செய்தார். இந்த வீடியோவை தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுதான் ‘ஸ்போர்ட் மேன் ஷிப்’ என கிரேம் ஸ்மித் குறித்து பதிவிட்டு வருகின்றனர். இது தற்போது வைரலாகி வருகிறது.