அமீரகத்தில் நடைபெற்று வந்த 13-ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் வென்ற மும்பை அணி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணியின் அதிரடி வீரரான ரோகித் ஷர்மா மும்பை அணியை வழிநடத்தி வருகிறார். தன்னுடைய கேப்டன்சியின் கீழ் ஒரு கேப்டன் 5 முறை கோப்பையை வெல்வது ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
நேற்றைய போட்டியில் மும்பை அணி வென்றதிலிருந்தே, ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் கேப்டன்சி குறித்தான ஒப்பீடை ரசிகர்கள் மட்டுமின்றி, சில முன்னாள் வீரர்களும் முன்வைக்க ஆரம்பித்துவிட்டனர். அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இது குறித்தான தனது கருத்தை காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர், "இந்திய அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மாவை நியமிக்காவிட்டால் அது இந்திய அணிக்குத்தான் இழப்பு. தோனியை சிறந்த கேப்டன் என்று ஏன் கூறுகிறோம்?. காரணம் அவர் 2 உலக கோப்பை, 3 ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ரோகித் ஷர்மா 5 ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்து ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார். 20 ஓவர் போட்டிகளிலாவது ரோகித் ஷர்மாவிற்கு கேப்டன் பொறுப்பை வழங்க வேண்டும். இல்லையென்றால், அது பெரிய அவமானம். இதைவிட பெரியதாக அவரால் எதுவும் செய்ய முடியாது. வெள்ளை பந்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி கேப்டன்சிக்கும், தன்னுடைய கேப்டன்சிக்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்பதை காட்டியுள்ளார். இதில் ஒருவர் 5 கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இன்னொருவர் ஒரு கோப்பை கூட வெல்லாதவர். விராட் கோலியின் கேப்டன்சி மோசமாக உள்ளது என்று நான் கூறவில்லை. இருவருக்கும் ஒரே மாதிரியான தளம் கிடைத்தது. ஆகையால், இருவரையும் ஒரே அளவுகோல் வைத்து ஒப்பிட வேண்டும். ரோகித் சிறந்த கேப்டனாக செயல்படுகிறார் என்று நான் உணர்கிறேன்" எனக் கூறினார்.