இந்திய கிரிக்கெட் வாரியம் டிராவிட்டுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி, இந்த விவகாரத்தில் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆதாயம் தரும் இரட்டை பதவிகளை வகிப்பதாக டிராவிட் மீது மத்தியப் பிரதேச கிரிக்கெட் அமைப்பின் உறுப்பினர் சஞ்சய் குப்தா புகாரளித்தார். அவரது புகாரில், "ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளில் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ராகுல் திராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராகவும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். இது விதிப்படி தவறு. எனவே பிசிசிஐ விதிமுறைப்படி ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளில் இருக்கக்கூடாது" என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து டிராவிட் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, "இந்தியக் கிரிக்கெட்டில் புதிய ஃபேஷன் ஒன்று வந்துள்ளது. செய்திகளில் இடம்பெறவும், புகழ்பெறவும் ஒருசிலர் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விஷயத்தைக் கையில் எடுக்கிறார்கள். இந்தியக் கிரிக்கெட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். பிசிசிஐ ஒழுங்குநெறி அதிகாரி இரட்டை ஆதாயப் புகார் விவகாரத்தில் ராகுல் திராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்" எனத் தெரிவித்தார்.
கங்குலியின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஹர்பஜன், "உண்மையாகவே, இந்திய கிரிக்கெட் வாரியம் எங்கே போகிறது என்று தெரியவில்லை. இந்திய கிரிக்கெட் திராவிட்டைக் காட்டிலும் சிறந்த மனிதரை இனி எப்போதும் பெறவே முடியாது. அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது, மிகப்பெரிய ஜாம்பவானான ராகுலைப் புண்படுத்துவதாகும். கிரிக்கெட்டிற்கு சிறப்பாகச் சேவை செய்தவர்களுக்கு கிரிக்கெட்டும் சேவை செய்யவேண்டும். உண்மைதான், கடவுள்தான் இந்திய கிரிக்கெட்டைக் காப்பாற்ற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.