உலகக்கோப்பை தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேலும் இந்த உலகக்கோப்பை தொடரில் ரோஹித் தனது நான்காவது சதத்தை பதிவு செய்தார். 104 ரன்கள் எடுத்திருந்தபோது ரோஹித் அவுட் ஆன நிலையில், முதல் விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து 180 ரன்கள் சேர்த்திருந்தனர். பின்னர் வந்தவர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 314 ரன்கள் எடுத்து.
315 என்ற வெற்றி இலக்குடன் ஆடிய வங்கதேச அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. இறுதியில் 48 ஓவர்களில் 286 ரன்களுக்கு வங்கதேசம் அணி ஆட்டமிழந்தது. இதனையயடுத்து இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
இந்திய அணியின் வெற்றி அளவுக்கு நேற்றைய போட்டியில் வைரலானது 87 வயது பாட்டி ஒருவரின் புகைப்படங்கள். சாருலதா படேல் என்ற அந்த பாட்டி முன்வரிசையில் அமர்ந்து இந்திய அணியை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வந்தார். இதனையயடுத்து முதல் பாதி ஆட்டம் முடிந்த நிலையில் வங்கதேசம் தனது பேட்டிங்கை தொடங்குவதற்கு முன், இடைவேளையில் சாருலதா பாட்டியை விராட் கோலி சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ஆசிர்வாதம் பெற்றதோடு, அவருடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் ரோஹித் சர்மாவும் அவரை சந்தித்தார்.
இந்நிலையில் சாருலதா பாட்டி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கோலி, "போட்டிக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக சாருலதா படேல் ஜி-க்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு 87 வயது. இதுவரை நான் இவரைப் போன்ற ஆர்வமும், அர்ப்பணிப்பும் உள்ள ரசிகரைச் சந்தித்ததில்லை. வயது என்பது வெறும் எண் மட்டுமே. ஆர்வம்தான் உங்களை எந்த எல்லையையும் கடந்து செல்ல வைக்கும். சாருலதா பாட்டியின் ஆசியுடன் நாங்கள் அடுத்த போட்டிக்கு முன்னேறியுள்ளோம்" எனக் குறிப்பிட்டிருந்தார். கோலியின் இந்த ட்வீட்டும், பாட்டியின் புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.