சவுத்தாம்டன் நகரில் கடந்த 5-ம் தேதி இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. அதில் தோனியின் கையில் அணிந்திருந்த கிளவுஸில் ராணுவத்தில் ஒரு பிரிவான பலிதான் ரெஜிமென்டின் முத்திரை இடம்பெற்றிருந்தது.
இதனை ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி இணையத்தில் பதிவிட்டனர். அதனை தொடர்ந்து உடனடியாக தோனியின் கிளவுஸில் இருக்கும் முத்திரையை நீக்குமாறு பிசிசிஐ க்கும், தோனிக்கும் ஐசிசி அறிவுரை வழங்கியது.
இதுகுறித்து ஐசிசி க்கு பதிலளித்த பிசிசிஐ, அது ராணுவ முத்திரை இல்லை எனவும், தோனி அதனை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி வேண்டும் எனவும் கடிதம் எழுதியது. இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள ஐசிசி, தோனி தனது கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் சர்வதேச போட்டிகளில் எந்த ஒரு தனிப்பட்ட வீரரும், அணியினரும், தனது ஆடையில், பயன்படுத்தும் பொருட்களில், கையில் அணியும் பேண்ட், ஆடைகள் போன்றவற்றில் தனிப்பட்ட செய்திகளைத் தெரிவிக்க அனுமதியில்லை. எனவே தோனி அதனை நீக்கியே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதனை கடுமையாக எதிர்த்து வரும் ரசிகர்கள், உலகக்கோப்பையில் நடுவர்கள் வழங்கும் தவறான தீர்ப்புகள் குறித்து முதலில் யோசித்து ஒரு முடிவு எடுங்கள். பின்னர் தோனியின் கையுறை குறித்து கவலைப்படலாம் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.