ஐபிஎல் போட்டித் தொடரின் 16 ஆவது சீசன் மார்ச் மாதம் 31 ஆம் தேதி துவங்க இருக்கிறது. முதல் போட்டியிலேயே சென்னை அணி நடப்புச் சாம்பியனான குஜராத் அணியை சந்திக்க உள்ளது.
சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற தோனி 4 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இதுவரை 11 முறை சென்னை அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறக் காரணமாகவும் இருந்துள்ளார். சென்னை அணி வெற்றிகரமான அணியாக இருப்பதற்கு காரணமே தோனி தான் என ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரே தோனிக்கு கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் எனப் பலர் கூறி வருகின்றனர். மேலும், சென்னையில் விளையாடிய பின்பே ஓய்வு பெறுவேன் என தோனி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் தோனியின் ஓய்வு குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “இந்த ஐபிஎல் தோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டி என்று கேள்விப்பட்டேன். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. தோனியால் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாட முடியும்.
அவர் இன்றும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் மிகவும் நன்றாகச் செயல்படுகிறார். தோனியின் ஆட்டத்தைப் போலவே அவரது தலைமையும் சிறப்பான ஒன்றாக உள்ளது. உடற்தகுதி மற்றும் ஆட்டத்தைப் புரிந்து கொள்ளும் தன்மை தோனியை நல்ல தலைவனாக்கியது. மைதானத்தில் அவரது திறமை அபாரமான ஒன்று. சி.எஸ்.கே வெற்றிகரமான அணியாக இருப்பதற்கு தோனி மிக முக்கிய காரணம்” எனக் கூறினார். ஷேன் வாட்சனின் இந்த கருத்து தோனி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.