2018ஆம் ஆண்டின் 11 வது ஐ.பி.எல் போட்டியின் 26வது ஆட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது இதில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதின. தொடர் தோல்வியால் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கெளதம் கம்பீர் விலகினார். ஆறு போட்டிகளில் விளையாடி ஐந்தில் தோல்வி, ஒருபோட்டியில் வெற்றி என்று டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை ஷ்ரேயஸ் ஐயர் ஏற்றுக்கொண்டார். நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி டாஸ் வென்று டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. கம்பீருக்கு பதிலாக இளம் வீரர் ப்ரித்வி ஷாவும், கொலின் முன்ரோவும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
தினேஷ் கார்த்திக் வழக்கம்போல் சுழல்பந்து வீச்சாளர்களிடம் பந்தை கொடுக்க முதலில் பியஷ் சாவ்லாவின் பந்தில் திணறியவர்கள் அதன்பின் அடிக்கத் தொடங்கிவிட்டனர். ப்ரித்வி ஷா 44பந்துகளில் 62 ரன்கள் எடுத்து தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்து பியூஷ் சாவ்லாவின் பந்தில் அவுட் ஆனார். முன்ரோவும் 33 ரன்களுக்கு வெளியேறினார். அதன் பின் இறங்கிய ஷ்ரயாஸ் ஐயர் கேப்டன் பதவியை உணர்ந்து கொல்கத்தா பந்து வீச்சாளர்களின் ஒவ்வொரு பந்தையும் துவம்சம் செய்து 10 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளை விளாசி 40 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 219 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்களை இழந்தது.
219 என்ற இமாலய இலக்கை அடைய களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் சரியான தொடக்கத்தை கொடுக்கவில்லை மேக்ஸ்வல் பந்தில் கிறிஸ் லின் ஐந்து ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சுனில் நரேன் எப்போதும்போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒன்பது பந்துகளில் 26 ரன்கள் குவித்து போல்ட் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.
அடுத்து வந்த உத்தப்பா, கேப்டன் தினேஷ் கார்த்திக் சொற்ப ரன்களில் வெளியேற. அதன்பின் இறங்கிய சுபாங்கில் மற்றும் ரசூல்ஜோடி டெல்லி அணி பந்து வீச்சை பதம்பார்க்க தொடங்கியது. சுபாங்கில் 37 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதிரடியாய் ஆடிய ரசூல் 30 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அவ்ஸ் கான் பந்தில் பௌல்டானார். அதன் பின் கொல்கத்தாவில் விளையாட யாருமில்லை கடைசியில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வி அடைந்தது.
டெல்லி சார்பாக மிஸ்ரா, போல்ட், மேக்ஸ்வெல் ஆகியோர் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர் ஆட்டநாயகனாக ஷ்ரேயஸ் ஐயர் தேர்வுசெய்யப்பட்டார். இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று டெல்லி புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறியது. கொல்கத்தா நான்கு தோல்விகளுடன் நான்காமிடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் முதலிடத்தில் உள்ள சென்னையும், கடைசி இடத்தில் உள்ள மும்பையும் மோதவுள்ளன.