ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது, தன்னை கறுப்பினத்தவர் எனக் கிண்டல் செய்யும் வகையிலான பெயரை அணி வீரர்கள் தனக்கு வைத்தாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி குற்றம்சாட்டியுள்ளார்.
2013, 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது, சக வீரர்கள் தன்னை ‘கலு’ என்ற கருப்பு நிறத்தைக் குறிக்கும் சொல்லைப் பயன்படுத்தி அழைத்ததற்கு சமி விளக்கம் கேட்டுள்ளார்.
இதுகுறித்த அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், "சமீபத்தில் எனது சக வீரர்கள் எனக்கு வாய்த்த பெயரின் அர்த்தத்தை அறிந்தேன். இதுதொடர்பாக உண்மையில் எனக்கு சில பதில்கள் தேவை. எனவே நான் பெயர்களைக் குறிப்பிடுவதற்கு முன்பு, தொடர்புகொண்டு விளக்கமளிக்க வேண்டும். தயவுசெய்து அந்த வார்த்தைக்கு இன்னொரு அர்த்தம் இருக்கிறது என்று சொல்லுங்கள். நான் உலகம் முழுவதும் விளையாடியுள்ளேன், நான் பலரால் நேசிக்கப்படுகிறேன். நான், ஹசன் மின்ஹாஜிடம் இந்தியாவில் கறுப்பின மக்களை எப்படி அழைப்பார்கள் எனக் கேட்டபோதுதான், என்னை அழைத்த வார்த்தையின் அர்த்தம் அர்த்தம் புரிந்தது. அதன் அர்த்தம் தெரிந்ததும், எனக்குக் கோபம் இருப்பதாகவும், அது இழிவான செயல் எனவும் நான் சொன்னேன். சன ரைசர்ஸ் ஹைதராபாத்துக்காக நான் விளையாடியபோது, கறுப்பின மக்களை இழிவுபடுத்தும் அதே வார்த்தையால் நான் அழைக்கப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது.
என்னை அப்படி அழைத்த அந்த நபர்களை நான் தொடர்புகொள்வேன். நீங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும், அந்த நேரத்தில் நான் அந்த வார்த்தையால் அழைக்கப்பட்டபோது அதன் பொருள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஒவ்வொரு முறையும் நான் அந்த வார்த்தையால் அழைக்கப்பட்டேன், அந்த நேரத்தில் அனைத்து வீரர்களும் சிரிப்பார்கள். வேடிக்கையான பெயர் என்பதால் சிரிக்கிறார்கள் போல என நினைத்தேன். ஆனால், இப்போது இது இழிவானது என்று நான் உணர்கிறேன், நான் உங்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்புகிறேன், அந்த பெயருடன் நீங்கள் என்னை அழைத்தபோது, நீங்கள் அனைவரும் அதை ஏதேனும் மோசமான வழியில் அல்லது வடிவத்தில் அர்த்தப்படுத்தினீர்களா? எனத் தெரிய வேண்டும். அதைப் பற்றிச் சிந்தியுங்கள், நாம் உரையாடலாம், அது மோசமான அர்த்தத்திலிருந்தால் நான் மிகவும் ஏமாற்றமடைவேன்" எனத் தெரிவித்துள்ளார்.