ஐபிஎல் தொடரில் நேற்று (21.04.2021) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்களைக் குவித்தது. ருத்துராஜ் கெய்க்வாட் 42 பந்துகளில் 64 ரன்களை எடுத்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் குவித்தார் டு பிளெஸிஸ்.
221 ரன்களை வெற்றி இலக்காக வைத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, முதல் 6 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்தது. இதனால் சென்னை அணி எளிதாக போட்டியை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஸ்ஸலும் தினேஷ் கார்த்திக்கும் அதிரடியாக ஆடத் துவங்கினர். ஒருகட்டத்தில் இவர்கள் அதிரடியால் ஆட்டம் கொல்கத்தா அணிக்குச் சாதகமாக திரும்புவது போல் இருந்தது. ஆனால் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து சென்னைக்கு வெற்றி உறுதி என ரசிகர்கள் நினைத்த நேரத்தில், வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ், சென்னை பந்துவீச்சாளர்களை விளாச துவங்கினார். சாம் கரனின் ஒரே ஒவரில் 4 சிக்ஸர்களுடன் 30 ரன்களைக் குவித்தார். ஆனாலும் மறுபுறத்தில் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தன. கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பிரஷித் கிருஷ்ணா கடைசி விக்கெட்டாக ரன்-அவுட் ஆனார். இதனால் சென்னை அணி த்ரில் வெற்றிபெற்றது.
இந்தப் பரபரப்பான போட்டி இந்த வருட ஐபிஎல் போட்டிகளில், ஹாட் ஸ்டாரில் அதிகம் பார்க்கப்பட்ட போட்டியாக பதிவாகியுள்ளது. மேலும் இந்த போட்டியிலும் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் சுனில் நரைனுக்கு எதிராக தோனி தனது முதல் பவுண்டரியை நேற்றைய போட்டியில் பதிவு செய்தார். 2012ஆம் ஆண்டிலிருந்து தோனி, நரைனின் 64 பந்துகளை எதிர்கொண்டிருந்தாலும் அவர் ஒரு பவுண்டரி கூட அடித்ததில்லை. 65வது பந்தில்தான் முதல் பவுண்டரியை அடித்துள்ளார்.
இந்தப் போட்டியில் 31 ரன்களுக்கே ஐந்து விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி, அதன்பிறகு 171 ரன்களைக் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் ஐந்து விக்கெட்டுகளை இழந்த பிறகு, ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும். ஒட்டுமொத்த இருபது ஓவர் போட்டிகளில் இது இரண்டாவது அதிகபட்சமாகும்.
கம்மின்ஸ் நம்பர் 8இல் இறங்கி அடித்த 66 ரன்கள், ஐபிஎல் வரலாற்றில் நம்பர் 8 அல்லது அதற்கும் கீழ் இறங்கிய வீரர்களால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன் ஹர்பஜன் சிங் 8வது வீரராக 64 ரன்கள் எடுத்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்து வந்தது. கொல்கத்தா அணி அடித்த 202 ரன்கள்தான், ஐபிஎல் வரலாற்றில் ஆல்-அவுட் ஆன அணி அடித்த அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அடித்த 188 ரன்களே ஆல்-அவுட் ஆன அணி அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்து வந்தது.
தீபக் சாஹர் முதல் ஆறு ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சென்னை பந்துவீச்சாளர் ஒருவர் முதல் பவர்-பிளேவுக்குள் நான்கு விக்கெட்டுகள் எடுப்பது இதுவே முதல்முறை. சாம் கரன் தனது நான்கு ஓவர்களில் 58 ரன்கள் வாரி வழங்கினார். சென்னை அணி பந்துவீச்சாளர் ஒருவர் அளித்த அதிக ரன்கள் இதுவாகும். மோஹித் ஷர்மாவும் சென்னை அணிக்காக விளையாடும்போது, நான்கு ஓவர்களில் 58 ரன்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.