இந்தியாவின் 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை நாயகன், லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் மேட்ச்-வின்னர், மிகச்சிறந்த பீல்டர், டைவ்-கேட்ச்கள், பார்ட்-டைம் பவுலர், ஆல்-ரவுண்டர் என இந்திய கிரிக்கெட்டிற்கு யுவராஜ் சிங்கின் பங்களிப்பு மகத்தானது. கிரிக்கெட்டில் பலதுறைகளில் தனது திறமைகளை வெளிகாட்டியவர்.
புல் ஷாட், பிளிக் ஷாட், கவர் டிரைவ் மற்றும் கட் ஷாட் இவரது பிரபலமான ஷாட்கள். மண்டியிட்டு இவர் அடிக்கும் சிக்ஸ்கள், சுழற்பந்து வீச்சில் இறங்கிவந்து அடிக்கும் ஷாட்கள் மற்றும் பலவகையான கிளாசிக் ஷாட்கள் மிகவும் ரசிக்கத்தக்கவை. சிறந்த பந்துவீச்சாளர்களைக்கூட, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் நிலைகுலைய செய்வார்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் யுவராஜ் அதிக ரன்கள் எடுக்காமல் அவுட் ஆகும்போது பேட்டை எறிந்துவிடுவார். ஒருமுறை சச்சின் அவரை "நீ எறிந்துவிட்ட பேட், உங்கள் வீட்டிற்கு உணவு தருகிறது. மீண்டும் மீண்டும் அதை செய்ய வேண்டாம்.” என்று கண்டித்தார். அதிலிருந்து தனது தவறை மாற்றிக்கொண்டார் யுவராஜ்.
2000-ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் முகமது கைப் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. யுவராஜ் சிங்கின் ஆல்-ரவுண்டர் ஸ்கில் அவருக்கு தொடர்நாயகன் விருதை பெற்றுக்கொடுத்தது. சிறப்பான ஆட்டத்தின் மூலம் தேசிய அணிக்கு அழைக்கப்பட்டார்.
கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தினார். சிறப்பான மிடில் ஆர்டர் பேட்டிங், பினிஷிங், உலகத்தரம் வாய்ந்த பீல்டிங் என அசத்த, குறுகிய காலகட்டத்தில் இந்தியாவின் முக்கிய வீரராக மாறினார். கைப் மற்றும் யுவராஜ் ஜோடியின் பீல்டிங் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் உலக அளவில் சிறந்த ஒன்றாக இருந்தது.
2005-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரராக வலம்வந்தார். ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் சராசரி 40+, விக்கெட்கள் 70+ என இந்த காலகட்டங்களில் இரண்டிலும் கலக்கிவந்தார். டி20 போட்டிகளில் தன்னுடைய அதிரடி பேட்டிங் மற்றும் பவுலிங் மூலம் அணிக்கு வெற்றிகளை தேடித்தந்தார்.
2011-ஆம் ஆண்டில், யுவராஜ் சிங்கின் இடது நுரையீரலில் ஒரு புற்றுநோய் கட்டி இருப்பதாக கண்டறியப்பட்டது. அதற்கான சிகிச்சை பெற்றார். 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் மீண்டும் இந்தியாவிற்காக களமிறங்கினார். அந்த போட்டியில் 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 34 ரன்கள் குவித்தார். கம்பேக்கிற்கு பிறகு 2012-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 142. 10 போட்டிகளில் 15 விக்கெட்கள். பவுலிங் சராசரி 12. எக்னாமி ரேட் 6. இப்படி மிகச்சிறப்பான ஒரு கம்பேக் கொடுத்து அசத்தினார்.
செப்டம்பர் 2012 முதல் ஏப்ரல் 2014 வரை இந்திய அணியில் யுவராஜ் சிங் விளையாடிவந்தார். டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும், ஒருநாள் போட்டிகளில் சொதப்பிவந்தார். இதனால் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். மீண்டும் ஜனவரி 2016-ல் அணியில் இடம்பிடித்தார். ஆனால் பெரிதாக சோபிக்காத காரணத்தால் மீண்டும் விலக்கப்பட்டார். இனி அவர் அணியில் மீண்டும் விளையாடுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
ஒரு நேர்காணலின்போது "புற்றுநோய் என்பது மரணம் அல்ல. பயப்பட வேண்டாம். நம்பிக்கையுடனும் பாசிடிவ் எண்ணத்துடனும் இருங்கள். தயவுசெய்து உங்கள் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம்.” என்று புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டினார். தனது இக்கட்டான காலகட்டத்தில் மிகவும் பாசிடிவாக இருந்த இவரது புற்றுநோய் உடனான போராட்டம், ரசிகர்களுக்கு இவர் மேல் இருந்த ஈர்ப்பை அதிகப்படுத்தியது.
இவரது தந்தை யோகராஜ் சிங்கும் கிரிக்கெட் வீரர். யோகராஜ் சிங் தோனி மீது அடிக்கடி குற்றசாட்டுகளை சுமத்திவருகிறார். யுவராஜ் சிங் அணியிலிருந்து நீக்கப்பட்டதுக்கு தோனிதான் காரணம் என பலமுறை கூறியுள்ளார்.
மிகப்பெரிய முக்கியமான போட்டிகளில் தன்னுடைய அபாரமான ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றி பெறச்செய்வார். 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் 9 போட்டிகளில் 362 ரன்களை எடுத்தார். பேட்டிங் சராசரி 90.50. இதில் ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதங்கள் அடங்கும். மேலும் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தொடர்நாயகன் விருதை பெற்றார். அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் மற்றும் 50+ ரன்கள் எடுத்தார். உலகக்கோப்பை போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
2007-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டிகளில் முதல் சூப்பர் 8 போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோற்றது. கட்டாயமாக வெற்றிபெற வேண்டிய இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 சிக்ஸர் சாதனையுடன் 16 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் குறைந்த பந்துகளில் (12) அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார். அதேபோல அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். இந்த முக்கியமான இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற இவரது பங்கு மிகவும் மகத்தானது.
அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். யுவராஜ் சிங்கின் சொந்த தொண்டு நிறுவனமான YouWeCan நிறுவனம், நூற்றுக்கணக்கான புற்றுநோய் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்தது. இவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, போராட்ட குணம் ஆகியவை வரும் தலைமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.