இம்ரான் தாஹிர் அணியில் இடம் பிடிப்பாரா என்ற கேள்விக்கு சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் விளக்கம் அளித்துள்ளார்.
13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள், 5 தோல்விகள் கண்டுள்ளது. சென்னை அணி வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தால் ஒவ்வொரு போட்டிக்கான அணி தேர்வின் போதும் சென்னை அணி தடுமாறி வருகிறது. கடந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஊதா நிறத்தொப்பியை கைப்பற்றிய இம்ரான் தாஹிருக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இம்ரான் தாஹிரை அணியில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்த நிலையில், இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஸ்டீபன் ஃபிளம்மிங், "தாஹிர் நிச்சயம் அணியில் இடம் பிடிப்பார். தற்போது உள்ள சூழல்படி, நான்கு வெளிநாட்டு வீரர்களில் இரு பேட்ஸ்மேன்கள், வேகமாக பந்துவீசக் கூடிய இரண்டு ஆல்ரவுண்டர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. தொடரின் பிற்பகுதியில் அவர் அணியில் இடம் பிடிப்பார். அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பெற முடியும் என்ற கட்டுப்பாடுகள் இருக்கும்போது அதற்கு ஏற்பதான் திட்டமிட முடியும்" எனக் கூறினார்.