Skip to main content

உலகக் கோப்பை கிரிக்கெட்; இந்திய அணியின் ஜெர்சி அறிமுகம்!

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

 Cricket World Cup; Indian team jersey introduction!

 

‘உலகக் கோப்பை கிரிக்கெட் 2023’ இந்திய அணியின் ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறை ஜெர்சியில் சில மாற்றங்கள் செய்துள்ளது.

 

இந்தியா தலைமையேற்று நடத்தும் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023, அடுத்த மாதம் அக்டோபர் 5 தொடங்கி நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. 

 

இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்கிறது. இந்தியாவின் முதல் போட்டி, சென்னை, எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுடன் நடக்கிறது. இந்த போட்டி அக்டோபர் 8 ஆம் தேதி நடக்கவுள்ளது. எனவே, கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் பதினைந்து நாட்களே இருக்கும் நிலையில், தினம் தினம் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி, உலகக் கோப்பை அணிகள் தங்கள் நாட்டின் பிரத்யேக ஜெர்சியை அறிமுகப்படுத்தி வருகிறது.

 

இந்நிலையில், இந்திய அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சியினை அடிடாஸ் நிறுவனம் ட்விட்டரில் பிரத்யேகப் பாடலுடன் வெளியிட்டுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், "1983ம் ஆண்டு தீப்பொறியைப் பற்ற வைத்தது. 2011ம் ஆண்டு பெருமையைக் கொண்டு வந்தது. 2023ம் ஆண்டு கனவின் தொடக்கத்தைக் குறிக்கிறது" எனப் பதிவிட்டிருந்தது. அந்த பாடல் வீடியோவின் இறுதியில், "மூன்றாவது கோப்பை கனவை நிறைவேற்றும் முயற்சியை இந்தியா நிறுத்தாது. மேலும் முயற்சியை நிறுத்தாதவர்களுக்கு முடியாதது எதுவுமில்லை" என நம்பிக்கை அளிக்கும் வரிகளில் பாடல் முடிந்தது.

 

மேலும், ஜெர்சியின் டிசைன் குறித்துப் பார்த்தால், வழக்கமான நீல நிற உடையின் தோள்பட்டையில் இந்தியாவின் மூவர்ணக் கொடியின் கோடுகளைப் பதித்துள்ளனர். இந்தியா இந்த முறை உலகக் கோப்பையை நடத்துவதால் மூவர்ணக் கொடியை வைத்து கவுரவப் படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டியது, ஆடையில் பாரத் என இல்லாமல் இந்தியா என்றே இருந்தது தான். ஏனென்றால், சமீபத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் பாரத் என மாற்றச் சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தினார். 

 

வருகிற உலகக் கோப்பைக்கான ஜெர்சியை பாகிஸ்தான் அணி தான் முதலில் ஆகஸ்ட் 28 அன்று அறிவித்தது. பின்னர், நியூஸிலாந்து அணி செப்டம்பர் 17ம் தேதி வெளியிட்டது. தற்போது, இந்திய அணி தனது அதிகாரப்பூர்வ உடையை இன்று (20-09-2023) அறிவித்துள்ளது. மற்ற அணிகளான இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து தங்களின் ஜெர்சியை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கு முன்னதாக இன்று, ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ 'தில் ஜாஷ்ன் போலே (இதயம் கொண்டாடுகிறது)' எனப் பெயரிட்ட பாடலை வெளியிட்டது. அதில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இடம் பெற்றிருந்தார். பாலிவுட்டின் பிரபலமான இசையமைப்பாளர் ப்ரீதம் இசையமைத்திருந்தார். இந்த கீதத்தில் இந்திய லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலின் மனைவியான நடன இயக்குநர் தனஸ்ரீ வர்மாவும் இடம்பெற்றுள்ளார். மூன்று நிமிடம் 22 வினாடிகள் நீளமுள்ள இந்த பாடல், 'ஒரு நாள் எக்ஸ்பிரஸ் ரயிலில்' இந்தியா வழியாகப் பயணம் செய்வது போல காட்சி அமைத்திருந்தனர்.