உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியானதையொட்டி ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணியும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலியா அணியும் இறுதிப் போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது. இறுதிப் போட்டி நாளை (19-11-23) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை நேரில் காண இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்த ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். அதனால் இந்த மைதானத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து அகமதாபாத் செல்லும் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சாதாரண நாட்களில் விமான கட்டணங்கள் 12 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை இருக்கும் இந்த நிலையில், தற்போது 25,000 வரை கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே போல், பல்வேறு இடங்களில் இருந்து விமான போக்குவரத்துக்கான கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.