இந்தியாவின் புகழ்பெற்ற மல்யுத்த குடும்பம் மகாவீர் சிங் போகாட்டின் குடும்பம். மல்யுத்த வீரரான இவர், தனது பெண்களையும் மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கியவர். அமிர்கான் நடிப்பில் வெளிவந்த ‘தங்கல்’ படம், மகாவீர் சிங் போகாட் மற்றும் அவரது பெண்களின் நிஜக்கதையை தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாவீர் சிங் போகாட்டின் மகள்கள் கீதா, பபிதா ஆகியோர் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர்கள். இவர்களின் ஒன்றுவிட்ட சகோதரியான ரித்திகா போகாட், மகாவீர் சிங் போகாட்டிடம் மல்யுத்த பயிற்சி பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் மார்ச் 17ஆம் தேதி உயிரிழந்துள்ளார். மார்ச் 14ஆம் தேதி நடந்த ஒரு மல்யுத்த போட்டியின் இறுதிச்சுற்றில், ஒரு புள்ளியில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட வேதனையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
ரித்திகாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் விஜய் குமார் சிங், “சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த இடத்திலிருந்து உலகம் தற்போது மாறிவிட்டது. விளையாட்டு வீரர்கள் முன்பு இல்லாத அளவுக்கு அழுத்தங்களை இப்போது எதிர்கொள்கின்றனர். இந்த அழுத்தங்களை சமாளிப்பது அவர்களின் பயிற்சியில் ஒரு முக்கியப் பகுதியாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.