Skip to main content

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கருத்தில் கொண்டு இந்திய அணி இன்று செய்யப்போகும் மாற்றம்?

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

Considering the Test Championship, the Indian team will makechanges?

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்திய நிலையில், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரு போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒன்றில் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

 

இதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் நேற்று முன்தினம் சென்னை வந்தன. இரு அணி வீரர்களுக்கும் விமான நிலையத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும். முதல் ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய அணி இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் சொதப்பி 117 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் வலுவாக உள்ளது. கடந்த போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். 

 

மறுமுனையில் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் நாலாபுறமும் சிதறடித்தனர். இன்று நடக்கும் போட்டியில் பந்துவீச்சில் மாற்றம் நிகழுமா அல்லது ஷமி, சிராஜ் ஆகியோரே களமிறக்கப்படுவார்களா என எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம் மைதானம் மெதுவானது என்பதால் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தலாம். இதனால் ஜடேஜா, அக்ஸர் படேல் ஏற்கனவே அசத்தி வரும் நிலையில் கூடுதலாக குல்தீப் யாதவிற்கு வாய்ப்புகள் வழங்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வாய்ப்புகள் கொடுக்கப்படும் பட்சத்தில் சிராஜ் அல்லது ஷமி யாராவது ஒருவர் ட்ராப் செய்யப்படலாம். அதேசமயம் இந்திய அணியின் தற்போதைய முடிவுகள் அனைத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி குறித்தே இருக்கும் என்பதால் இன்று ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. ஏனெனில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஷமியின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நேற்று உம்ரான் மாலிக் பந்துவீச்சு பயிற்சியில் அதிக நேரம் செலவிட்டது குறிப்பிடத்தக்கது.  

 

பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். இன்று அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் அதுவே அவருக்கு இறுதியான வாய்ப்பாக அமையும் எனக் கூறப்படுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய கே.எல்.ராகுல் இன்றும் அசத்தினால் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு பஞ்சம் இருக்காது.

 

சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஆஸி அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஒரு போட்டிகளில் 5000 ரன்களை தொட அவருக்கு இன்னும் 51 ரன்களே தேவை. அதே போல் இன்றைய போட்டியில் அவர் சதம் அடித்தால் இந்திய அணிக்கு எதிராக அதிக சதம் அடித்து சாதனை படைத்த ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்வார்.

 

உத்தேச வீரர்கள் : ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, முகமது ஷமி/ உம்ரான் மாலிக்,  முகமது சிராஜ்/ அர்ஸ்தீப், அக்சர் படேல், குல்தீப் யாதவ்