19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றியை எட்டியது.
மேற்கு இந்திய தீவுகளின் ஆண்டிகுவாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதைத் தொடர்ந்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 44.5 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 189 ரன்களை மட்டுமே எடுத்து பெவிலியில் திரும்பியது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ராஜ் பாவா 5 விக்கெட்டுகளையும், ரவி குமார் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ள இந்திய அணிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இளம் வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். அபார ஆற்றலை வெளிப்படுத்தி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதுகாப்பான, திறமையான கைகளில் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
பி.சி.சி.ஐ-யின் செயலாளர் ஜெய்ஷா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூபாய் 40 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்திய அணியின் பயிற்சியாளர் உள்ளிட்ட குழுவினருக்கு தலா ரூபாய் 25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.