மார்ச் மாதம் நடைபெற இருந்த 13-ஆவது ஐ.பி.எல் தொடரானது கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின், கரோனா பாதிப்பு குறைவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டு, அது குறித்தான அறிவிப்பை பி.சி.சி.ஐ வெளியிட்டது.
அதன்படி, செப்டம்பர் 19 -ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இத்தொடரில், 56 போட்டிகள் லீக் போட்டிகள், 4 போட்டிகள் பிளேஆஃப் சுற்று போட்டிகள் ஆகும். ஒவ்வொரு ஐ.பி.எல் தொடர் முடிவின் போதும், அதிக ரன்களுக்கான ஆரஞ்சு நிறத் தொப்பி, அதிக விக்கெட்டிற்கான ஊதா நிறத் தொப்பி உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில், இவ்வருடம் வழங்கப்பட்ட விருதுகள் விவரம் பின்வருமாறு,
நடப்பு ஐ.பி.எல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடி, 473 ரன்கள் குவித்த பெங்களூரு அணியின் இளம் வீரரான தேவ்தத் படிக்கல்லுக்கு 'வளரும் வீரர்' விருது வழங்கப்பட்டது.
14 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்திய ராஜஸ்தான் அணி வீரர் ஆர்ச்சருக்கு, 'மதிப்புமிக்க வீரர்' என்ற விருது வழங்கப்பட்டது.
அதிக சிக்ஸர் அடித்த வீரர்களுக்கு வழங்கப்படும் விருது மும்பை அணி வீரர் இஷான் கிஷானுக்கு வழங்கப்பட்டது.
அதிக ரன்கள் அடித்தவர்களுக்கு வழங்கப்படும் 'ஆரஞ்சு' நிறத் தொப்பியானது, 670 ரன்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் வகித்த பஞ்சாப் அணி வீரர் கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது.
அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்கு வழங்கப்படும் 'ஊதா' நிறத் தொப்பியானது, 30 விக்கெட்டுகளை வீழ்த்திய டெல்லி அணி வீரர் ரபடாவுக்கு வழங்கப்பட்டது.
சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதானது, நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிகபட்ச ரன் சேர்ப்பு வேக விகிதமாக 191.42 கொண்டிருந்த மும்பை அணி வீரர் பொல்லார்ட்டிற்கு வழங்கப்பட்டது.
'கேம் சேஞ்சர்' என்ற ஒரு விருதும் பஞ்சாப் அணி வீரர் கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது.