ஐபிஎல் தொடரின் 16 ஆவது சீசன் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளன. போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை துவங்கப்படும் சில மணிநேரங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.
ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்களது அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றி ஐபிஎல்லுக்கான ஹைப் ஏற்றுகின்றன. அதே வேளையில் ஏலத்தின் போது எடுக்கப்பட்ட வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதும் மாற்று வீரர் அணியில் சேர்க்கப்படுவதுமான நிகழ்வுகளும் தொடர்கின்றன.
சென்னை அணியைப் பொறுத்தவரை கேப்டன் தோனிக்கு இது கடைசி ஐபிஎல்லாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அதேசமயத்தில் அவர் இன்னும் 2 முதல் 3 சீசன்கள் விளையாடலாம் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தோனி விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரி ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். முகேஷ் சௌத்ரிக்கு பதிலாக ஆகாஷ் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள முகேஷ் சௌத்ரி 13 போட்டிகளில் பந்துவீசி 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆகாஷ் சிங் 2020 ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் சிறப்பாக பந்து வீசினார். உள்ளூர் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் ஆகாஷ் சிங் ராஜஸ்தான் அணியில் கடந்த சீசன்களில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இடது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தோனி முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனும் நிலையில் பென் ஸ்டோக்ஸ் முதல் பாதி போட்டிகளில் பந்து வீசமாட்டார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது முகேஷ் சௌத்ரி தொடரில் இருந்து விலகியது அணிக்கு பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது. முகேஷ் சௌத்ரியும் ஆகாஷ் சிங்கும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.