11வது சீசன் ஐ.பி.எல் போட்டி பிளே ஆஃப்பை நோக்கி அனைத்து அணிகளும் சென்றுகொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற 44வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. சென்னை டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஷேன் வாட்சனும், அம்பத்தி ராயுடுவும் தொடக்க வீரர்களாக களத்தில் இறங்கினர். இந்த சீசனில் அதிரடியாய் ஆடி வரும் ராயுடு இரண்டு பௌண்டரிகள்
மட்டும் அடித்து 12 ரன்களுடன் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் போல்டாகினார்.
அடுத்து இறங்கிய ரெய்னா, வாட்சனுடன் கைகோர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வாட்சன் 39 ரன்களில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் வெளியேறினார். ரெய்னா தனது அதிரையினால் அரைசதம் விளாசி இஷ் சோதி பந்தில் வெளியேறினார். பின்னர் தோனியும், பில்லிங்ஸ் இணைந்து ஒரு சிறப்பான பார்ட்னர் ஷிப்பை அளித்தனர். இறுதியாக சென்னை அணி இருபது ஓவர்களுக்கு 176 ரன்களுக்கு நான்கு விக்கெட்களை இழந்திருந்தது. அடுத்து இறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்க வீரர்களான ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆரம்பத்திலிருந்து அதிரடியை ஆடத்தொடங்கினர். பென் ஸ்டோக்ஸ் 11 ரன்கள் எடுத்து ஹர்பஜன் சிங் பந்தில் போல்டாகி வெளியேறினார்.
அடுத்து இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஒன் மேன் ஆர்மியாக, சென்னை அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை ஜோஸ் பட்லர் துவம்சம் செய்தார். 60 பந்துகளில் 95ரன்கள் விளாசி அணியை வெற்றியடையச் செய்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 177 ரன்கள் எடுத்து வெற்றியடைந்தது. ஜோஸ் பட்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ராஜஸ்தான் அணி புள்ளிபட்டியலில் 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலேயே நீடிக்கிறது. சென்னை அணியும் 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலேயே நீடிக்கிறது.