இடுப்புப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டித்தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான டேவிட் வார்னர் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. முதல் போட்டியில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து நேற்றைய போட்டியிலும் வென்ற ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அதிரடியாகக் கைப்பற்றியது.
கடந்த இரு போட்டிகளிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நேற்றைய போட்டியில் காயமடைந்தார். போட்டியின் நான்காம் ஓவரில் இந்திய வீரர் தவான் அடித்த பந்தை தடுக்க முற்படுகையில் அவருக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனையடுத்து, மைதானத்தில் இருந்து வெளியேறிய வார்னர் மீண்டும் ஃபீல்டிங் செய்ய வரவில்லை.
காயத்தின் தன்மை மற்றும் எதிர்வரவிருக்கும் டெஸ்ட் போட்டிகளைக் கருத்தில் கொண்டு ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டித்தொடரில் இருந்து வார்னர் விலகியுள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு முன் தன் உடற்தகுதியை நிரூபிக்கும்பட்சத்தில் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரு போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி முறையே 69, 83 ரன்கள் குவித்த வார்னரின் விலகல் என்பது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி எஞ்சியுள்ள ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றி பெறுவதற்கும், இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றுவதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.