இங்கிலாந்து எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மீண்டும் ட்ராக்கைப் பிடித்திருக்கிறது. வலுவான நிலையில் இருந்து இங்கிலாந்து அணிக்கு, நாட்டிங்காமில் நடந்த மூன்றாவது போட்டி மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
அசைக்கவே முடியாது என்றிருந்த நிலையை இந்திய அணி மாற்றியதற்கு, அணியில் நிகழ்த்திய சில மாற்றங்கள்தான் காரணம் என சொல்லப்பட்டது. அதேசமயம், இங்கிலாந்து அணி தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டது.
இந்நிலையில், வரும் 30-ஆம் தேதி சவுத்தாம்டனில் நடக்கவிருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் அணியில் சில மாற்றங்களை ஏற்படுத்த இருக்கிறது இங்கிலாந்து. அதன்படி, கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட இருக்கும் வீரர்களின் பெயர்ப்பட்டியலையும் அந்த அணி வெளியிட்டுள்ளது.
அதன்படி, சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷீத்திற்கு பதிலாக, மொயீன் அலி அணியில் இடம்பெறுகிறார். ஏற்கெனவே, மொயீன் அலியை அணியில் சேர்க்காதது விமர்சனத்திற்குள்ளான நிலையில், இந்த முடிவு இங்கிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கலாம். அதேபோல், ஆண்டர்சன் வீசிய பந்தில் கைவிரலை முறித்துக்கொண்ட ஜானி பேர்ஸ்டோவிற்கு பதில், ஜேம்ஸ் வின்ஸ் களமிறங்க இருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சாம் குர்ரனை, கிறிஸ் வோக்ஸிற்கு பதிலாக அந்த அணி இறக்கவுள்ளது. இந்த மாற்றங்களைப் போலவே இந்திய அணியிலும் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.