கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடர் இன்று இரவு அமீரகத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதுகின்றன. இரு அணிகளிலும் வழக்கமாக ஆடும் முன்னணி வீரர்கள் சிலர் விலகியுள்ளதால் அந்த இடத்தை யாரைக் கொண்டு நிரப்புவது என அணி நிர்வாகங்கள் யோசித்து வருகின்றனர்.
சென்னை அணியில் நட்சத்திர வீரரான ரெய்னாவும், முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கும் தங்களுடைய சொந்த காரணங்களுக்காக அணியில் இருந்து விலகியுள்ளனர். அதேபோல, மும்பை அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான இலங்கையைச் சேர்ந்த மலிங்கா விலகியுள்ளார். மலிங்காவின் விலகல் மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மலிங்காவிற்குப் பதிலாக அந்த இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பட்டின்சன் களமிறங்க இருக்கிறார்.
அந்த இடத்தில் மாற்று வீரரைக் களமிறக்கினாலும், ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியது, இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி அணியின் வெற்றியை உறுதி செய்வது என மலிங்காவின் கடந்த கால பங்களிப்பிற்கு சமமான பங்களிப்பு மாற்று வீரரிடம் இருந்து கிடைப்பது கேள்விக்குறியே. இந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரும், ஐபிஎல் ஒளிபரப்பு குழுவினரில் ஒருவருமான பிரட் லீ இது தொடர்பாக தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "மலிங்காவின் இடத்தை பும்ராவால் நிரப்ப முடியும். நான் பும்ராவின் தீவிர ரசிகன். தனக்கென்று தனியான ஒரு பாணியை வைத்திருக்கிறார். அவரால் இரண்டு வகையிலும் பந்தை சுழலச் செய்ய முடியும். புதிய பந்தில் அற்புதகமாக பந்து வீசக்கூடியவர். அவர் பழைய பந்தில் பந்து வீச வேண்டுமென்று நான் நினைக்கிறேன். அதன் மூலம் இறுதிக்கட்ட ஓவர்களில் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். பும்ரா தொடர்ச்சியாக யார்க்கர் வீசக்கூடியவர். எல்லா பந்துவீச்சாளராலும் தொடர்ச்சியாக இதை செய்ய முடியாது" எனக் கூறினார்.